வைரஸ் காய்ச்சல் காரணமாக அருவி திரைப்படத்தை நேற்று தான் பார்த்தேன். புதிய அனுபவம் ஒரு பேய் அருவி மனதுக்குள் பெய்ய துவங்கியது.
தமிழ் சினிமா கற்று தந்த அத்தனை இலக்கணங்களையும் படம் துவங்கிய சில நொடிகளில் உடைத்து புதிய வகையான தனித்துவமான திரைப்படத்திற்குள் நம்மை அருவியின் சாரல் இழுத்து செல்ல துவங்கியது.
கோவா திரைப்பட விழாவில் ஒரு உலக திரைப்படத்தை பார்க்கிறோம் என்ற உணர்வுக்குள் தள்ளப்பட்டேன். சத்தமான ஆக்ரோசமாக உரத்த குரலில் தான் நான் மதிக்கிற அத்தனை தமிழ் சினிமாக்களும் பேசியிருக்கிறது. அதை தவிர்த்து மிக மெல்லிய குரலில் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக எளிமையாக என்னுடன் ஒரு படம் பேச துவங்கியது.
இடைவேளையின் போது வெளியுலகத்தை பார்க்கப்பிடிக்காமல் மீண்டும் அவசரமாக திரையரங்கிற்குள் நுழைந்தேன். மீண்டும் அந்த சாரலுக்கு மனம் ஏங்க துவங்கியது. நீண்ட நாட்கள் குடிக்காமல் காமத்தை ருசிக்காமல் இருப்பவனின் உடலும் நாவும் அந்த ருசிக்கு ஏங்கி துடிப்பதைப்போல இடைவேளைக்கு பிறகு அருவியில் நனைய பரிதவித்தேன்.
அருவி என்னுள் இறங்கத்துவங்கினாள். படம் முடியும் தருவாயில் மெதுவாக நான் என்னையறியாமல் அவளுக்காக அழத் துவங்கினேன். எப்பிறப்பிலும் அறியாத ஒரு புது உயிருக்காய் நிழல் உருவத்துக்காய் என் கண்கள் கசியத்துவங்கின. அது அருவிக்காக கசிந்த கண்ணீரல்ல... உலகம் முழுக்க உள்ள எய்ட்ஸ் நோயாளிக்களுக்கான கண்ணீர். ஆர்ப்பாட்டமில்லாத எளிமையான சினிமா ஆனால் எத்தனை ஆர்ப்பரிப்போடு சொல்ல வந்த அன்பை ஆயிரம் நாவுகளோடு நம் காதோரம் பேசுகிறது. ஒலிப்பெருக்கிகள் வெடித்து சிதறும் 8d டிஜிட்டல் ஒலிகளுடன் இடைவிடாத அறிவுரைகளை ஒப்பிக்கும் படங்களுக்கு மத்தியில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் மெல்லிய குரலில் அன்பை பற்றி பேசுகிறது. அந்த அன்பை அதன் உட்பொருளை ஒரு மந்திரம் போன்று பேசுகிறது.
வாழ்த்துக்கள் அருண்பிரபு.
தமிழ் சினிமா பெருமைப்பட ஒரு அழகான சினிமா.
அதிதீ பாலன் ஆகா பெண்ணை உன்னை நான் காதலிக்கத்துவங்கிவிட்டேன். அருவி லவ் யூ. துப்பாக்கி பிடித்தபடி ஆர்ப்பாட்டமின்றி நீ பேசும் உடல்மொழி... நோயின் தீவிரத்தில் முகப்புத்தக வீடியோவில் நீ பேசும் வசனங்கள் ஆகா அற்புதம் பெண்ணே.....
தமிழ் சினிமா உன்னை விதவிதமான உடைகளில் கனவுப்பாட்டு எடுக்க அனுமதிக்காமல் இருக்க உன் மனம் வலிமையாக இருக்க காளியை வேண்டுகிறேன்.
தமிழ் சினிமாவில் ஏற்கனவே இவர்கள் பார்த்த ஒரு வெற்றிப் படத்தின் காட்சிகளை ஒத்து இவர்கள் நம்பும் பாசம் காதல் நகைச்சுவை சண்டைக்காட்சிகள் இடைவேளை டிவிஸ்ட் கிளைமேக்ஸ் டிவிஸ்ட் தொய்வில்லாத திரைக்கதை பரபரப்பு இருந்தால் தான் இங்குள்ள திரைக்கதை மேதைகள் ஒரு கதையை ஓகே பண்ணுவார்கள்.
இதையெல்லாத்தையும் தாண்டி காட்சிகளை இல்லாத ஒரு திரைப்படத்தை எப்படி அருண் ஒரு தயாரிப்பாளரிடம் சொல்லி ஓகே வாங்கினார். எஸ்.ஆர் பிரபு இதை நம்பி எப்படி படத்தை தயாரித்தார். மிக அற்புதம் எஸ் ஆர் பிரபு.. உங்கள் ரசனையின் உச்சத்தில் தமிழ் சினிமாவில் சில அற்புதங்களை நீங்கள் நிகழ்த்தி காட்டுகிறீர்கள். மிக தரமான ரசனைக்கொண்ட தயாரிப்பாளர் நீங்கள். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் கம்பெனிக்கு பெரும் வெற்றிகள் கிடைக்கட்டும். கோடிகள் கொட்டட்டும்.
படத்தின் இசை எடிட்டிங் ஒளிப்பதிவு துணை நடிகர்கள் அத்தனை அருமை,தனிதனியாக எழுத 100 பக்கங்கள் உள்ளன.
படத்தின் மிக பெரிய குறை ஒரு சாதாரண டிவி ஸ்டுடியோவில் கேட்ட துப்பாக்கிச்சத்தத்தை கேட்டு மத்திய மாநில போலீஸ் ஸ்டுடியோவைச் சுற்றி வளைப்பது சினிமாத்தனம். அதற்கான முன்னேற்பாடுகள் மிகு கற்பனை. மசாலாச்சினிமாவின் காட்சிகள்.
அதைத்தவிர்த்து இருக்கலாம்,
அதைத்தவிர்த்து இருந்தால் குறையொன்றுமில்லாத சினிமாவாக அருவி இருந்திருக்கும்.
எனினும் இது தமிழ் சினிமாவிற்கு புதிய உற்சாக வரவு.
Comments